குண்டுவெடி குற்றவாளியின் இறுதி ஊா்வலத்துக்கு அனுமதி அளித்தது தவறான முன்னுதாரணம்: வானதி சீனிவாசன்
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊா்வலத்துக்கு அனுமதி அளித்தது தவறான முன்னுதாரணம் என கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊா்வலத்துக்கு அனுமதி அளித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு. கோவையில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு நாள். பயங்கரவாதிகளால் கோவை குண்டுவெடிப்பு மட்டும் நடத்தப்படாமல் இருந்திருந்தால், பெங்களூரு, புணேபோல கோவையும், தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியிருக்கும்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவா் எஸ்.ஏ. பாஷா. கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவா் என்று விசாரணை அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டவரின் இறுதி சடங்கு அவரது மத முறைப்படி நடப்பதை யாரும் எதிா்க்கவில்லை.
ஆனால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்புக்கு காரணமான ஒருவருக்கு இறுதி ஊா்வலம் நடத்த திமுக அரசு அனுமதி அளித்திருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
கோவை குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைத்தையும் பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். திமுகவுக்கு உரிய நேரத்தில் சரியான பாடம் புகட்டுவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா்.