"Seemanக்கு கட்சி நடத்தும் தகுதியில்ல" - NTKவில் இருந்து விலகியவர்கள் ஆவேசம்
குன்னூர்: மஞ்சள் காமாலை பதற்றத்தில் உலிக்கல் பேரூராட்சி மக்கள்! - அதிகாரிகள் சொல்வதென்ன?
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகில் இருக்கிறது உலிக்கல் பேரூராட்சி. 17 வார்டுகளைக் கொண்ட இந்த பேரூராட்சி பழங்குடிகள், தோட்ட தொழிலாளர்கள், விவசாய கூலிகள், சிறு குறு வணிகர்கள் அதிகமுள்ள பகுதியாக இருக்கிறது. இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட சில கிராமங்களைச் சேர்ந்த மக்களில் சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகளும் தென்பட்டிருக்கிறது. குன்னூரில் உள்ள தனியார் உடல் பரிசோதனை மையத்தில் சோதனை மேற்கொண்டதில் சிலருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அச்சமடைந்த மக்கள், கோவை மாவட்டம், கேரள மாநில எல்லைப் பகுதியில் நாட்டு வைத்தியம் மூலம் மஞ்சள் காமாலைக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சுகாதாரத்துறை மூலம் சேலாஸ் பகுதியில் முகாம் அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். சேலாஸ் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பதாக கூறப்படுவதால், மக்கள் தாமாகவே முன்வந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை அதிகாரிகள், "உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களில் 6 நபர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். புதிதாக 4 நபர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இங்கிலீஷ் மருத்துவத்தை தவிர்த்து நாட்டு வைத்தியம் பெற்று வருகின்றனர். ஊட்டி மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தி வருகிறோம். குடிநீர் ஆதாரங்களில் மாசு ஏற்பட்டு அதன் மூலமாக இந்த பாதிப்பு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சேலாஸ் , பில்லிமலை, நீர்மம்முட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் ஆதாரங்களை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. காய்ச்சிய குடிநீரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துமாறு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இந்த பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிப்பதாக சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை " என்றனர்.