குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: கன்னி
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
உங்களின் தொழில் ஸ்தானமான பத்தாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவான், உங்களின் தலைமையை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்வார். செல்வத்துடன் செல்வாக்கும் உயரும். செய்யும் தொழிலில் மேன்மையும், பண வரவும் உண்டாகும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட உடல் உபாதைகள் மறையும். கடன் தொல்லை, மறைமுக எதிர்ப்புகள் என்று எதுவும் ஏற்படாது. வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும். புதிராக இருந்த உறவினர்கள் நல்லபடியாகப் பழகுவார்கள். எல்லோருக்கும் நல்லவர் என்று பெயரெடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
குரு பகவானின் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் உங்கள் சிந்தனைகள் தெளிவாகும். நன்கு யோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இதனால் வருமானம் உயரும். இறை வழிபாட்டில் முழு ஈடுபாடு உண்டாகும். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பீர்கள்.
குரு பகவானின் பார்வை நான்காம் ராசியின் மீது படிகிறது. இதனால் சகோதர, சகோதரிகளின் ஆதரவு நன்றாக இருக்கும். தாழ்வு மனப்பான்மை மறையும். குடும்பத்தில் உங்கள் பெயரும், செல்வாக்கும் உயரும். தீயோரின் சகவாசம் நீங்கும். நண்பர்களிடம் உங்களுக்கு முன்பு ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.
குரு பகவானின் பார்வை ருணம், ரோக, சத்ரு ஸ்தானத்தில் படிகிறது. இதனால் நெடுநாளாக பாதிக்கப்பட்டிருந்த தோல் மற்றும் வயிறு உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். கடினமாக உழைத்து பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். உங்களை வீண் வம்பு வழக்குகளில் சிக்க வைக்க நினைக்கும் நண்பர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு
மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆனாலும் சக ஊழியர்கள் பகைமை பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தினால் தோல்வியிலிருந்து தப்பிக்கலாம். மற்றபடி உங்கள் செயல்களை செவ்வனே செய்து முடிப்பீர்கள். பயணங்களால் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும்.
வியாபாரிகளுக்கு
வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். கடும் போட்டிகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே புதிய முதலீடுகள் வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சரளமாக முடியும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள்.
விவசாயிகளுக்கு
வருமானம் குறைந்தாலும் செலவு அதிகரித்தாலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். விளைபொருட்களை உடனுக்குடன் சந்தைக்கு எடுத்துச் சென்று நல்ல முறையில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளை நன்கு பராமரிப்பீர்கள். பூச்சி மருந்துகளை சரியாகப் பயன்படுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு
புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். புதிய உத்வேகத்துடன் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் முக்கியமான பயணங்களைச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு
அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பிறரின் அபிமானத்தைப் பெறுவீர்கள். இருப்பினும் தொழிலில் போட்டி இருப்பதால் விருதுகளையும், பாராட்டுகளையும் பெற கவனமாக உழைக்க நேரிடும்.
பெண்மணிகளுக்கு
கணவருடனான ஒற்றுமை சுமாராக இருந்தாலும் கணவர் வழி உறவினர்களுடன் நல்லுறவு தொடரும். சிலருக்கு வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே உணவு விஷயங்களில் கவனம் தேவை. ஆன்மிகத்தில் ஈடுபட்டு மனத் தெளிவு பெறவும்.
மாணவமணிகளுக்கு
நன்றாகப் படித்து எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனதை ஒருநிலைப்படுத்தினால் மேலும் புகழடையலாம்.
உத்திரம் - 2, 3, 4
வேலை மாற்றம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனுகூலமாகும். ஊதிய உயர்வுடன் கூடிய பணி மாற்றம் உண்டு. வெளிநாட்டில் பணிபுரியும் அன்பர்களுக்கு அரச அனுகூலம் உண்டு.
ஹஸ்தம்
வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்திக் கொள்ள சிறப்பான சந்தர்ப்பம் அமையும். சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள்.
சித்திரை - 1, 2
பெரிய கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும்.
பரிகாரம்
வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். முடிந்தவரி கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.