ரூ.6,000 கோடி மோசடி வழக்கு: நிதி நிறுவன நிா்வாகி பாங்காகில் கைது
குறைகள் தீர....
சோழ மன்னர் ஒருவருக்கு ஏற்பட்ட குறை நீங்க, பல தலங்களுக்குச் சென்று வழிபட்டும் பலன் கிட்டவில்லை. அவரது கனவில் திருமால் முதியவர் வடிவில் தோன்றி, தான் காஞ்சிபுரத்தில் திருவூரகப் பெருமாளாக அருள் செய்வதாகவும் , அங்கு வந்து வழிபட குறைபாடு விலகும் எனக் கூறினார்.
மன்னர் காஞ்சிபுரத்துக்கு வந்து திருவூரகக் கோயிலுக்கு சென்று வழிபட்டார். ஆனால் பெருமாள் ஆதிசேஷன் வடிவிலே காட்சி அளித்ததைக் கண்டு சரியான கோயிலுக்குதான் வந்திருக்கிறோமா? என குழப்பம் ஏற்பட்டு, அங்கேயே தங்கினார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய பெருமாள் தானே அத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் எழுந்தருளியுள்ளதை உணர்த்தினார். மன்னனின் குறைபாடும் அகன்றது.
காஞ்சி ஊரகப் பெருமாளைத் தரிசித்த மன்னர் குன்றத்தூரில் அதே போன்ற கோயிலைக் கட்டினார். மன்னருக்கு பெருமாளும் திருப்பதியில் அருள்புரியும் வேங்கடவன் போன்றே காட்சி அளித்தார். மன்னரும் மகிழ்ச்சி அடைந்து அதே போன்று சிலை வடித்து கோயிலில் பிரதிஷ்டை செய்து "திருவூரகப்பெருமாள்" என்று அழைத்து வணங்கினார் என்று கோயில் தலவரலாறு குறிப்பிடுகிறது.
கோயில் சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் (1216 } 1256) கட்டப்பட்டதாகும். குன்றத்தூர் நாகேசுவரமுடையார் கோயிலில் பணியாற்றிய நடன மங்கை ஒருத்தி, கோயிலில் விளக்கு எரிக்க தானம் அளித்த செய்தி கல்வெட்டில் காணப்படுகிறது. தெலுங்கு சோழ மன்னனான விஜயகண்ட கோபாலன் கல்வெட்டு (1257), பெருமாளை "இலந்தத்த விண்ணகர எம்பெருமான்' என போற்றுகிறது.
விஜயநகர மன்னர் கோயிலை விரிவுபடுத்தி மகா மண்டபம், கோபுரம், ஆகியவற்றை கட்டுவித்தும் திருப்பணியும் செய்துள்ளார். கோபுர நுழைவுவாயிலின் விதானப் பகுதியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் நடுவில் தாமரை மலரும், அதனைச் சுற்றி அனுமன், கருடன், திருமாலின் அவதார சிற்பங்களுடன் கூடிய சிற்ப வேலைப்பாடு சிறப்பாக உள்ளது.
பெருமாளை எழுந்தருளச் செய்யும் பல்லக்குக்கு மேலே மரவிதானம், பூ, கொடி, யாளி வரிசையும் நுணுக்கமான வேலைப்பாட்டுடன் காணப்படுவது இக்கோயிலின் தொன்மைக்கு சான்றாக விளங்குகிறது.
கருவறையில் பெருமாள் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் தாங்கி காட்சி தருகின்றார். பெருமாள் மேற்கு திசை நோக்கி காஞ்சிபுரத்தை திருவூரகப்பெருமாளை பார்க்கும் விதமாக அமைந்திருக்கிறார். தாயார் "திருவிருந்தவல்லி' என்ற பெயர் கொண்டு, அன்பர்களுக்கு வற்றாத செல்வத்தை அளிக்கும் விதமாக அற்புத வடிவில் உள்ளார்.
திருச்சுற்றில் கல்யாணராமர் சந்நிதியும், எதிரில் வணங்கிய கோலத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயர் சந்நிதியும் அமைந்துள்ளன. பக்தர்கள் இவருக்கு வேண்டிக் கொண்டு வெண்ணெய்க் காப்பு சார்த்தும் பரிகாரம் சிறப்பானது.
நாகதோஷம், கோள்களினால் ஏற்படும் குறைபாடுகள் உள்ளோர் பெருமாளை வழிபட்டு நலம் பெறும் சிறந்த பிரார்த்தனைத் தலமாகவும் இந்தக் கோயில் விளங்குகிறது.காஞ்சிபுரத்தில் மங்களாசனம் பெற்று விளங்கும் உலகளந்த பெருமாள் கோயில், நான்கு திவ்ய தேசங்கள் உள்ள ஒரே கோயில் என்ற பெருமையை உடையது. அந்தக் கோயிலுடன் அபிமான தலமாகவும், பிரார்த்தனைத் தலமாகவும் விளங்கும் திருஊரகப்பெருமாள் கோயிலில் அறநிலையத் துறையின் வழிகாட்டுதலின்படி, திருப்பணிகள் நடைபெற்றன. பிப்ரவரி
3}இல் சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
}கி. ஸ்ரீதரன்,
(தொல்லியல்துறை } பணி நிறைவு).