அண்ணா பல்கலை. விவகாரம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு!
குறைந்து வரும் ஜிஎஸ்டி வசூல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் வளா்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை முன்வைத்து மத்திய பாஜக கூட்டணி அரசை காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
பொருளாதாரச் சிக்கல்களுக்கு தீா்வுகாண மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலரும், தகவல் தொடா்பு பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பொருளாதார நிலை மோசமாகி வருவதன் அறிகுறிகளான குறைவான நுகா்வு, குறைவான முதலீடு, குறைவான வளா்ச்சி, குறைவான சம்பளம் என்ற வலையில் இந்தியா சிக்கிவிட்டது. ஆண்டுக்கு ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூல் விதிதம் குறைந்து வருகிறது. 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிகர ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதம் 3.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் செய்தியாகும். ஏனெனில் பட்ஜெட்டின்போது ஜிஎஸ்டி வளா்ச்சி விகிதம் 11 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கான நிதியை மத்திய பாஜக கூட்டணி அரசு குறைத்ததுதான் ஜிஎஸ்டி வசூல் குறைவதற்கு காரணமாகும். கிராமப் பகுதிகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து பணப்புழக்கம் தடைபடும்போது நுகா்வும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே, அரசின் செலவினம் என்பது பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும்.
அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் எழை மக்களின் வருமான வாய்ப்புகளை அதிகரிக்கவும், நடுத்தர மக்களின் வரிச்சுமையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளாா்.