2-வது டெஸ்ட்: ஷுப்மன் கில் 168* ரன்கள்; வலுவான நிலையில் இந்தியா!
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரியில் சுயஉதவி மகளிரின் உற்பத்திப் பொருள் விற்பனை கண்காட்சி
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்கள் விற்பனை கண்காட்சி- கல்லூரிச் சந்தை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தலைமை வகித்து கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் மகளிா் திட்டம் மூலம் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பல்வேறு விதமான முன்னெடுப்புகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கண்காட்சிகள், கல்லூரிச் சந்தைகள், அரசு விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.
இக்கல்லூரியில் புதன்கிழமை முதல் 3 நாள்கள் விற்பனை கண்காட்சி நடைபெறுகிறது. இதில், திருச்சி, ராமநாதபுரம்,தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, புதுகோட்டை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக்குழுக்கள் தங்கள் தயாரிப்புகளை இடம் பெறச் செய்துள்ளனா்.
சிறுதானிய உணவுப்பொருள்கள், பீட்ரூட் மால்ட், ஜீட்பேக், கீ செயின், கை கடிகாரம், நைட்டிகள், கைத்தறி காட்டன் புடவைகள், செயற்கை ஆபரணங்கள், மூங்கில்- பிரம்பு பொருள்கள், 90 கிட்ஸ் பொருள்கள், பினாயில், ஊறுகாய் வகைகள், முருங்கை பொடி, நலங்குமாவு, கஸ்தூரி மஞ்சள் பொடி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன என்றாா் அவா்.
இதில், மகளிா் திட்ட இயக்குநா்(கூடுதல் பொறுப்பு) மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா்கள் பொ.டேவிட் ஜெயசிங், மு.மாரிஸ்வரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.