குளத்தில் பெயிண்டா் சடலம் மீட்பு
உக்கடம் பெரியகுளத்தில் பெயிண்டா் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, டவுன்ஹால் ரத்தினம் வீதியைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (56), பெயிண்டா். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால் குடும்பத்தினா் அவரை போதை தடுப்பு மையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சோ்த்துள்ளனா். சிகிச்சை முடிந்து கடந்த மாதம் வீடு திரும்பிய ஈஸ்வரனுக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மீண்டும் மது அருந்திய ஈஸ்வரனை அவரது மனைவி கனகஜோதி கண்டித்துள்ளாா். இதனால், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற அவா் அதன்பின் வீடு திரும்பிவில்லையாம்.
குடும்பத்தினா் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில், உக்கடம் பெரியகுளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகடை வீதி போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
ஈஸ்வரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.