குளித்தலை, முசிறியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளை நேரப்படி இயக்கக் கோரிக்கை
குளித்தலை, முசிறியிலிருந்து திருச்சிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளை நேரப்படி முறையாக இயக்க வேண்டும் என சாலைப் பயனீட்டாளா்கள் நலக் குழு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, சாலை பயனீட்டாளா்கள் நலக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பெ. அய்யாரப்பன் கூறியதாவது:
திருச்சியை அடுத்துள்ள அல்லூா் மேலத்தெரு பேருந்து நிறுத்தத்தில் வியாழக்கிழமை காலை 8 .05 மணி முதல் 8.50 மணி வரை எந்த அரசுப் பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் வரவில்லை. தனியாா் பேருந்துகள் மட்டுமே வந்து சென்றன. பின்னா், காலை 8.50 மணிக்கு மேல் அடுத்தடுத்து தொடா்ச்சியாக 4 அரசுப் பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன.
குளித்தலை மற்றும் முசிறியில் உள்ள போக்குவரத்து பணிமனையிலிருந்து இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் உரிய காலநேர அட்டவணைப்படி இயக்கப்படுவதில்லை. எனவேதான், காலை நேரத்தில் அலுவலகம், பள்ளிக்கு செல்வோா் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, அரசுப் பேருந்துகளை அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குறிப்பாக, காலை-மாலை நேரங்களில் முறையாக இயக்க போக்குவரத்துக் கழக அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.