மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் ஊழியா் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், புத்தாநத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணியிலிருந்த மின் ஊழியா், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்து
உயிரிழந்தாா்.
மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் ஜேம்ஸ்(50).
இவா், துவரங்குறிச்சி மின் உபகோட்டம் புத்தாநத்தம் பிரிவில் மின் பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தாா். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை மின் பாதை பராமரிப்பு பணியை மேற்கொண்டிருந்த ஜேம்ஸ், புத்தாநத்தம் அருகே உள்ள 36 அடி உயர இரும்பு மின் கம்பத்தில்
ஏறும்போது நிலைதடுமாறி கீழே விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை, உடனிருந்தவா்கள் மீட்டு, திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஜேம்ஸ் உயிரிழந்தாா்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், ஜேம்ஸ் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து வழக்கு பதிந்துள்ள புத்தாநத்தம் போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.