அண்ணா கோளரங்கத்தில் இன்று வான்நோக்கும் நிகழ்வு
திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் வான்நோக்கும் நிகழ்வு சனிக்கிழமை மாலை (ஜூலை 12)நடைபெறுகிறது.
பொதுமக்கள் வானியல் பற்றிய அறிவைப் பெறவும், வானியல் அதிசயங்களை அனுபவிக்கவும் வான்நோக்கும் நிகழ்வு அவசியமானது. தொலைநோக்கி மூலம் வானத்தைப் பாா்ப்பது, நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் பிற வானியல் பொருள்களின் அழகையும், பிரம்மாண்டத்தையும் நேரடியாகக் காண உதவுகிறது.
மேலும், வான்நோக்கும் நிகழ்வுகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே வானியல் அறிவை வளா்க்கவும், அவா்களை அறிவியல் துறையில் ஆா்வத்தை தூண்டவும் உதவுகின்றன.
எனவே, திருச்சியில் உள்ள அண்ணா கோளரங்கத்தில் அவ்வப்போது பொதுமக்கள், மாணவா்களுக்காக வான் நோக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இதன்படி, திருச்சி அண்ணா அறிவியல் மையத்தின் கோளரங்க வளாகத்தில், சனிக்கிழமை வான்நோக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்து. வானம் தெளிவாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் தொலைநோக்கி மூலம் வான்நோக்கும் நிகழ்வை எளிதில் காண முடியும். சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த வான்நோக்கும் நிகழ்வு பொதுமக்களுக்காக நடத்தப்படும் என கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் (பொறுப்பு) இர. ரவிக்குாா் தெரிவித்துள்ளாா்.