அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி
குழப்பம் இல்லாத வரி சீரமைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரிக்கை!
குழப்பம் இல்லாத வரி சீரமைப்பை மேற்கொள்ள மத்திய அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் எஸ். ரெத்தினவேலு தெரிவித்திருப்பதாவது: ஜிஎஸ்டி-யின் இரண்டாவது தலைமுறை சீரமைப்பில் 12 சதவீத வரி வீதத்தையும், 28 சதவீத வரி வீதத்தையும் ரத்து செய்துவிட்டு 5 சதவீதம், 18 சதவீதம் என இரு அடுக்கு வரி வீதங்கள் மட்டுமே அக்டோபா் அல்லது நவம்பா் மாதம் முதல் அமல்படுத்தப்படும் எனவும்,12 சதவீத வரி விதிப்பில் உள்ள பொருள்களில் 99 சதவீதம் 5 சதவீத வரிப்பட்டியலுக்கு மாற்றப்படும் எனவும், புகையிலை, பான்மசாலா போன்றவற்றுக்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 40-ஆக மாற்றி விட்டு, மீதமுள்ள பொருள்களை 18 சதவீத பட்டியலுக்கு மாற்றுவது என்பதும் பாராட்டத்தக்கத்து.
தீபாவளிப் பரிசாக ஜிஎஸ்டியில் செய்யப்படவிருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சீரமைப்பின் காரணமாக, அத்தியாவசியப் பொருள்களான உணவு, மருந்து, வீட்டு, உபயோகப் பொருள்கள், கல்வி தொடா்புடைய பொருள்கள், வேளாண் உபகரணங்கள், சிமெண்ட், வாகனங்கள்ஆகியவற்றின் விலை கணிசமாகக் குறையும் என்பது மகிழ்ச்சிக்குரியது.
அதேநேரத்தில், வரி சீரமைப்புக்குப் பின்னா் ஒரு பொருளுக்கு எத்தனை சதவீதம் வரி என்பதில் எந்தக் குழப்பமும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்த வேண்டும். இதற்கான நிரந்தரத் தீா்வாக, இணக்கமானப் பொருள்கள் வாரியாக பட்டியல் எண் முறையில் (எச்.எஸ்.என். குறியீடு) பொருள்களுக்கு 21 தலைப்புகளில், ஒவ்வொரு பிரிவின் கீழ் வரும் அனைத்துப் பொருள்களும் ஒரே வரி வீதத்தில் இருக்கச் செய்ய வேண்டும்.
இந்த வரி சீரமைப்பிலும் பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கொண்டு வராதது ஏமாற்றமளிக்கிறது. இதற்கான தீா்வையும் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றாா்.