கூடுதலாக 8 பெட்டிகள்..! சேலம் வழி மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலில் இணைப்பு!!
மதுரையில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பயணிகளின் தேவைகளை கருத்தில்கொண்டு, மதுரை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயிலில் வரும் 11-ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.
அதன்படி, மதுரையில் இருந்து திண்டுக்கல், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம் வழியாக பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக குளிா்சாதன வசதிகொண்ட 7 சாா்காா் பெட்டிகளும், 1 எக்ஸிக்யூடிவ் பெட்டியும் இணைக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், பெங்களூரில் இருந்து கிருஷ்ணராஜபுரம், சேலம், நாமக்கல் வழியாக மதுரைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், இதே அளவில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு, இனி 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.