``கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கும் வயிற்றெரிச்சல் மனிதர்கள்'' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்
மத்திய அமைச்சர் அமித்ஷாவை, அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தார்.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக வேறொருவரை அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் பேசிவருகிறார்.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அதிமுக - பாஜக கூட்டணி
"எம்ஜிஆர் தொடங்கிய மக்கள் இயக்கம் 52 ஆண்டுகள் கடந்து வெற்றி வரலாறு படைத்து வருகிறது. ஜெயலலிதா இந்த இயக்கத்தை பெரிய மக்கள் இயக்கமாக உருவாக்கினார்.
அவர் மரணத்திற்கு பின் இந்த இயக்கத்தை இரவு பகல் பாராது வெற்றிப்பாதையில் வழிநடத்தி தமிழக மக்களுக்காக எடப்பாடி பழனிசாமி உழைத்து வருகிறார்.
அதிமுக-பாஜக கூட்டணியில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா என்று முதலமைச்சர் ஸ்டாலினும், அதிமுகவில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்ற பகல் கனவிற்கு சில பேர் இரையாகும் பிரச்னை உள்ளது.
பிளவு உள்ளது என மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு பெருகிவரும் செல்வாக்கை திசை திருப்பும் வகையில் ஆளுங்கட்சி ஒருபுறமும், அதற்கு சிலர் இரையாகியுள்ள நிலையை பார்க்கும் ஒவ்வொரு தொண்டனும் வேதனை அடைகிறார்கள்.
சிலரால் பொறுக்க முடியவில்லை
எடப்பாடி பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தில் இதுவரை 27 மாவட்டங்களில் 140 சட்டமன்றத் தொகுதிகளில் 80 லட்சம் மக்களை சந்தித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சி மலர தன் உயிரைக் கொடுத்து தியாகம் செய்யத் தயாராக இருக்கிற எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கான தொண்டர்களை வழிநடத்தி, இந்த இயக்கத்தை ராணுவக் கட்டுப்பாடுடன் வெற்றிப்பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறார்.
ஒரு சாமானியத் தொண்டராக இருந்து இந்த சவால்களைத் தன் அனுபவத்தால், ஆளுமையால் சாதனையாக மாற்றிக் கொண்டிருப்பதைச் சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவதூறுகள், புரளிகள், கற்பனைகளைப் பரப்பி வந்தார்கள். ஆனால் அது அனைத்தும் இன்றைக்குப் புஸ்வானமாகிப் போனது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி முன் களப்பணியாளராகச் சாமானியத் தொண்டராக மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெல்வது உறுதி. அதற்குச் சாட்சியாக எடப்பாடியார் செல்லும் இடங்களெல்லாம் மக்கள் எழுச்சியாக வரவேற்றார்கள்.
எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டிருக்கலாம்.
அந்தப் பொறாமைத் தீயினால் தங்கள் தடத்தை மாற்றிக்கொண்டு, விண்ணளவு உயர்ந்திருக்கும் அதிமுகவின் செல்வாக்கில் பின்னடைவை ஏற்படுத்திவிடலாம் என்று ஒற்றுமை என்று கூறிக் கொண்டு வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் தோல்வியைத்தான் தருவார்கள்.
மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்
எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணத்தை மடைமாற்றம் செய்ய வயிற்றெரிச்சல் மனிதர்கள் அங்கே சென்றார், இங்கே சென்றார், அவரைச் சந்தித்தார், இவரைச் சந்தித்தார் என்று பத்திரிகைச் செய்தி வருகிறது.
ஆனால் அமித்ஷாவோ இங்கு வந்து எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் விருந்து சாப்பிட்டு, எடப்பாடியார் தலைமையில் மீண்டும் ஆட்சி மலரும், அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளது என்று பறைசாற்றிச் சென்றுவிட்டார்.
இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் மனிதர்களுக்கு ஜெயலலிதா ஆட்சி மலரும் என்பதை நம்மால் பதிலாகச் சொல்ல முடியுமே தவிர, வேறு எந்தப் பதிலும் சொல்ல முடியாது.
மூத்த முன்னோடிகளே இப்படிச் செய்தால் சாமானியத் தொண்டர்கள் எங்கே போக முடியும்? அதிமுக, ஜனநாயக இயக்கம், தொண்டர்கள் இயக்கம், மக்கள் இயக்கமாக இதைக் கட்டிக்காத்து வரும் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை. அசைத்துப் பார்க்கலாம் என்று கனவு கண்டால் தோற்பது நீங்களாகத்தான் இருப்பீர்கள்.
2026 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி நிச்சயம் மலர்ந்தே தீரும். இது சத்தியம். அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மாற்றிவிட்டு எடப்பாடி பழனிசாமி ஒருவர்தான் முதலமைச்சர் என்று மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்" என்றார்.