செய்திகள் :

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

post image

அனல் தகிக்கும் மேற்கூரையில்லாத திடலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுக்கு அக்னிப்பரீட்சையாக நடந்து முடிந்துள்ளது அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு.

"வாகை சூடும் வரலாறு திரும்புகிறது' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாடு, முதல் பிரச்னையாக எதிர்கொண்டது தேதி மாற்றம். பிறகு, மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் கீழே விழுந்தது முதல், வெயில் தாக்கத்தால் சுருண்டு விழுந்த தொண்டர்களை விரைவாக வெளியே கொண்டு வருவதற்கு உரிய பாதையும் வசதியும் இல்லை என்பது வரை ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுடன் நிறைவடைந்துள்ளது இந்த மாநாடு.

மாநாட்டின் கட்டமைப்பில், திட்டமிடலில், ஒருங்கிணைப்பில் பல குறைகள் இருந்தாலும், அவற்றைக் கடந்து மாநாட்டுக்கு லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்களும், வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில், தன்னைத்தானே வருத்திக் கொண்டு அமர்ந்த ரசிகர்களும், விஜய் மீதான ஈர்ப்பின் காரணமாக வந்தவர்கள் என்பதை உணர்த்தின.

"கட்சி தொடங்குவதாகக் கூறிய அவரே (ரஜினிகாந்த்) தொடங்கவில்லை; இவரா கட்சி தொடங்கப் போகிறார்?' என தனக்கு எதிராக எழுப்பப்பட்ட முதல் கேள்வி முதல், தவெக- அதிமுக இடையே ரகசியக் கூட்டணி என்று அடிபடும் சமீபத்திய விமர்சனம் வரை அனைத்துக்கும் விஜய் தனது பேச்சின் மூலம் பதில் அளித்தார்.

"மத்திய பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்கிறது, தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது என்பது போல தமிழகத்திலும் பாஜக ஒட்டாது' என்றதன் மூலம் அந்தக் கட்சியை எதிர்க்கும் நிலைப்பாட்டில் காட்டிவரும் உறுதிப்பாட்டை விஜய் தெளிவுபடுத்தியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

மாநில அரசுக்கு எதிரான விமர்சனங்களாக, தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, சட்டம் - ஒழுங்கு சரியில்லை, ஊழல் மலிந்த துறைகள் என்ற குற்றச்சாட்டுகளுடன், அரசு ஊழியர்கள், விவசாயிகள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரையும் ஆளும் திமுக அரசு வஞ்சித்ததாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார் விஜய்.

அதிமுக- தவெக கூட்டணி உருவாகிறது; அதிமுகவை விஜய் விமர்சிப்பது இல்லை; 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிமுக, பாஜக கூட்டணி முறியும்; அதிமுக, தவெக அங்கம் வகிக்கும் புதிய கூட்டணி உருவாகும் எனப் பல ஊகங்கள் தமிழக அரசியலில் வலம் வந்து கொண்டிருந்தன. "ஒரே கொள்கை எதிரி பாஜக; ஒரே அரசியல் எதிரி திமுக' என சில மாதங்களுக்கு முன்பு விஜய் தெரிவித்ததிலிருந்து, அவை அனைத்தும் பொய் என்பதை வெளிப்படுத்த மதுரை மாநாட்டை விஜய் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிகிறது.

"எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட கட்சியை (அதிமுக) தற்போது பாதுகாப்பது யார்? தற்போது அந்தக் கட்சி எப்படி உள்ளது? இவற்றையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் அதிமுக தொண்டர்கள் வேதனையில் தவிக்கின்றனர்' என எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிரான விமர்சனத்தை விஜய் முன்வைத்ததும், "இது, அறியாமையால் எழுப்பப்பட்ட கேள்வி.

இதுகூடத் தெரியாதவர் (விஜய்) அரசியல் கட்சித் தலைவராக இருக்கிறார் ' என எடப்பாடி பழனிசாமி எதிர்வினையாற்றியிருப்பதும் அதிமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே இன்னும் இணக்கம் ஏற்படவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

"திரைத் துறையிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.தான். 2026-இல் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அதிமுகவின் அப்பழுக்கற்ற தொண்டர்களுக்குத் தெரியும்' என விஜய் குறிப்பிட்டதை, அந்தக் கட்சித் தொண்டர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கும் உத்தியாகவே கருத வேண்டியுள்ளது.

அதிமுக தலைமைக்கு எதிரான விமர்சனத்தை முன்வைத்துவிட்டு, அந்தக் கட்சியின் தொண்டர்களை விஜய் அரவணைத்துப் பேசியிருப்பது தற்போதைய அரசியல் சூழலில் அவ்வளவு எளிதாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல. இதன் பின்னணி பேசுபொருளாகியுள்ளது.

இதேபோல, "எம்.ஜி.ஆரின் அத்தனை குணங்களையும் கொண்டவர் என்னுடைய அண்ணன் விஜயகாந்த்' என விஜய் குறிப்பிட்டதும், அதைத் தொடர்ந்து மாநாட்டுத் திடலில் ஒலித்த வாழ்த்து முழக்கங்களும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

"என் பெயர் குறிப்பிடப்படாத நிலையில், முகவரி இல்லாத கடிதத்துக்குப் பதில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை' என கமல்ஹாசன் தெரிவித்திருந்தாலும், "நான் மார்க்கெட் இழந்த பிறகு அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை; படைக்கலன்களுடன் வந்துள்ளேன்' என விஜய் பேசியது, கமல்ஹாசனுக்கான இடித்துரையாகவே கருதப்படுகிறது.

கொள்கை எதிரி யார்?, அரசியல் எதிரி யார்? யார் யாரையெல்லாம் பிடிக்கும்?, எதை எதையெல்லாம் பிடிக்காது? எனப் பல விஷயங்களை தொண்டர்களுடன் பகிர்ந்துகொண்ட விஜய், தவெக தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்பதையும் இந்த மாநாட்டின் மூலம் தொண்டர்களுக்கு சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

"தவெக தலைமையில் மாபெரும் மக்கள் சக்தி நம்முடன் அணி அணியாகத் திரண்டிருக்கும்போது எந்த அடிமைக் கூட்டணியிலும் சேரும் அவசியம் நமக்கு இல்லை. தவெகவின் கூட்டணி சுயமரியாதைக் கூட்டணியாக இருக்கும். நம்பி வருவோருக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் உரிய பங்களிப்பு தரப்படும்' என மாநாட்டில் பேசியிருப்பது தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைய அக்கட்சித் தலைமை காட்டும் உறுதியை வெளிப்படுத்தியுள்ளது.

தான் அமைக்கப்போவது கூட்டணி ஆட்சிதான் என்பதை மட்டுமல்ல, தனித்து ஆட்சி அமைக்கும் அளவிலான வெற்றியைத் தான் எதிர்பார்க்கவும் இல்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் நடிகர், மன்னிக்கவும், தலைவர் விஜய்.

மதுரையில் பெரும் திரளாகக் கூடிய தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு கூடிக் கலைந்தபோது, பலரும் 2005-இல் இதேபோல மதுரையில் மாநாடு கூட்டி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை (தேமுதிக) நடிகர் விஜயகாந்த் தொடங்கியதுடன் ஒப்பிடத் தவறவில்லை.

அப்போது போலவே இப்போதும் எழுப்பப்பட்ட கேள்வி "யாருடைய வாக்கைப் பிரிக்கப் போகிறது இந்தக் கட்சி?.

சர்ச்சை பேச்சு!

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசுகையில் "நரேந்திர பாய் தாமோதர மோடி ஜி' அவர்களே என விஜய் குறிப்பிட்டார். பிறகு, "ஜி' பதில் சொல்லுங்க "ஜி' என்றார். இதேபோல, முதல்வர் குறித்துப் பேசுகையில் அவரை "ஸ்டாலின் அங்கிள்' என்றே குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியை "ஜி' , முதல்வர் ஸ்டாலினை "அங்கிள்' என்றும் விஜய் கிண்டலடிக்கும் தொனியில் பேசியது தொண்டர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், ஏறத்தாழ 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையை நெருங்கிக் கொண்டிருக்கும் தலைவர்கள் குறித்துப் பேசியபோது விஜய் சினிமா பாணி வசனம் பேசி அடிப்படை அரசியல் நாகரிக வரம்பை மீறிவிட்டதாகப் பலரும் விமர்சிக்கிறார்கள்.

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..?

சி.மகேந்திரன் மூத்த தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.மக்கள் தங்கள் மீது வைக்கும் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், வெற்றி என்பது கணக்கீடுகளைச் சாா்ந்தது என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது தந்திர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

அரசியலில் பரபரப்புக்கு மேல் பரபரப்பாகத் தொடர்ந்து ஏதாவது நடந்துகொண்டேயிருக்கிறது, திட்டமிட்டோ, திட்டமிடாமலோ.யாரும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.திடீரென, ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

நாடு விடுதலை பெற்று 78 ஆண்டுகள் நிறைவடைய நான்கு நாள்கள் இருக்கும்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவொன்று, நம் நாட்டிலுள்ள தெரு நாய்களின் மீதான வன்மத்தை ஒருபுறமும் வாஞ்சையை இன்னொருபுறமுமாகக் கொப்பு... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ராகுல், தேர்தல் ஆணையம், டிரம்ப்... அல்லோலகல்லோலம்!

அல்லோலகல்லோலம் என்றொரு சொல் அவ்வப்போது எங்கேயாவது இதழ்களில் தட்டுப்படும்; ஏதோ கலவரச் சூழல் என்றளவில் பொருள் புரிந்துகொள்ளப்படும். உண்மையிலேயே என்னதான் பொருள் என்று துழாவினால், இணையத்தில் அழையா விருந்த... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

பரபரப்பாகக் கழிந்திருக்கிறது ஒரு வாரம்... பஹல்ஹாம் படுகொலை பற்றி ஒருவழியாக நாடாளுமன்றத்திலும் பேசியாகிவிட்டது; பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து விவாதத்துக்குப் பதிலளித்து உரையாற்றியிருக்கிறார்.ஏதோ இ... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... ஏன், எதற்காக? சொல்லுங்கள் தன்கர்ஜி!

மாநிலங்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டத்தைத் தலைமை தாங்கி நடத்துகிறார். அவையின் அலுவல் ஆலோசனைக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.மாலை நாலு, நாலரை மணி வரையிலும் வழக்கமான வேலைகள... மேலும் பார்க்க