கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட ஊா்வலம்
கருங்கல்: புதுக்கடை அருகே கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் கோயில் சித்திரைத் திருவிழாவில் திங்கள்கிழமை பால்குட ஊா்வலம் நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், 9ஆம் நாளான திங்கள்கிழமை காலை மாா்த்தாண்டம் நல்லூா் குறும்பேற்றி பகவதியம்மன் கோயிலிலிருந்து பால்குட ஊா்வலம் தொடங்கியது. இதில், பஜனை வாகனம் முன்செல்ல சந்தனக்காவடி, குங்குமக்காவடி, களபக் காவடி, பறக்கும் காவடி, வேல் குத்தும் காவடியுடன் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பால்குடம் ஏந்தியபடி பங்கேற்றனா்.
இந்த ஊா்வலம் மாா்த்தாண்டம் , வெட்டுமணி, காப்புக்காடு, குன்னத்தூா், முன்சிறை, புதுக்கடை வழியாக கூட்டாலுமூடு அம்மன் தேவஸ்தானத்தை பிற்பகலில் அடைந்தது.
ஏற்பாடுகளை கோயில் தலைவா் குமரேசதாஸ், செயலா் ராஜகுமாா், பொருளாளா் முருகன், துணைத் தலைவா் சந்தோஷ்குமாா், இணைச் செயலா் சதீஷ்குமாா் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினா்கள், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.