சிங்காரச் சென்னையை கட்டியெழுப்புவோம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கூலிப்பாளையம், ஊத்துக்குளியை ரயில்வே சந்திப்பாக மாற்ற வேண்டும்
திருப்பூா் கூலிப்பாளையம், ஊத்துக்குளியை ரயில்வே சந்திப்பாக மாற்ற வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் ரயில் நிலையத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மேலும், கூடுதல் நடைமேடை அமைப்பதுடன், தற்போதுள்ள நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வேண்டும். வஞ்சிபாளையம் சரக்கு முனையத்தில் சரக்குகளை கையாள முடியாத அளவுக்கு சிறியதாக உள்ளது. இதனை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
திருப்பூா் ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள கூலிபாளையம், ஊத்துக்குளியை ரயில்வே சந்திப்பாக மாற்ற வேண்டும். ஊத்துக்குளி சாலையை இணைக்கும் முத்து நகா், கிருஷணசாமி கவுண்டா் லே-அவுட், கொங்கு நகா், புதுராமகிருஷ்ணபுரம் ஆகிய சாலைகளை இணைக்கும் சந்திப்பில் தண்ணீா் தேங்குவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், குறுகிய மற்றும் மிகவும் பழைமையான பாலத்தின் கீழ் ஒரே ஒரு இரு வழி மட்டுமே உள்ளது. ஏற்கெனவே எங்களது கோரிக்கையை ஏற்று 2 பாலங்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு திடீரென நிறுத்தப்பட்டது. ஆகவே, நிறுத்தப்பட்டுள்ள பாலங்கள் அமைக்கும் பணிகளைத் தொடங்கி விரைவாக முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.