Pahalgam: `78 ஆண்டுகளாக சண்டை போட்டு என்ன சாதித்தீர்கள்?’ - தாக்குதலுக்கு கவாஸ்க...
கூவம் ஆற்றில் ரூ.20.37 கோடியில் மேம்பாலம்: ஊரக வளா்ச்சித் துறை மாநில கூடுதல் இயக்குநா் ஆய்வு
திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும் இடத்தை மாநில ஊரக வளா்ச்சித்துறை கூடுதல் இயக்குநா் சுமதி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
கடம்பத்தூா் ஒன்றியம், தண்டலம் கிராமத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறனா். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லவும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அத்தியவாசிய பொருள்கள் வாங்கி வரவும் கிராமத்தில் இருந்து சுமாா் 2 கி.மீ தொலைவில் உள்ள கடம்பத்தூருக்கு கூவம் ஆற்றைக் கடந்து சென்று வந்தனா்.
மேலும், தண்டலம் கிராமத்தில் இருந்து கடம்பத்தூருக்கு செல்ல பேருந்து வசதியும் கிடையாது. அதேபோல் இங்கிருந்து கடம்பத்தூருக்கு செல்ல நேரடி இணைப்பு சாலை வசதியும் கிடையாது. இதனால் இப்பகுதியில் விவசாய உற்பத்தி பொருள்களையும் சந்தைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையிருந்தது.
மழைக்காலங்களில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலகட்டத்தில் தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் பிஞ்சிவாக்கம், அகரம் வழியாக சுமாா் 10 கி.மீ சுற்றித்தான் கடம்பத்தூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், பல்வேறு காரியங்களுக்கு செல்லும் போது பொதுமக்களுக்கு தேவையில்லாத வீன் அலைச்சல் மற்றும் செலவும் ஏற்பட்டு வந்தது.
இதைக் கருத்தில் கொண்டு தண்டலம் அருகே உள்ள கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் விக்ரமாதித்தான் மற்றும் கிராம மக்கள் ஒன்று சோ்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினா்.
இதேபோல் இக்கிராமத்தைச் சுற்றியுள்ள நுங்கம்பாக்கம், போளிவாக்கம், மேல்நல்லாத்தூா், கீழ்நல்லாத்தூா், வெள்ளேரித்தாங்கல், கொப்பூா், பாப்பரம்பாக்கம், புதுவள்ளூா், இலுப்பூா், வலசைவெட்டிக்காடு கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் உரம் மற்றும் பூச்சி மருந்துகள், விதைகள் வாங்க கடம்பத்துருக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால், சரியான நேரடி இணைப்பு சாலை இல்லாததால் பலதப்பட்ட மக்களும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதற்கிடையே பொன்னேரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. அதில் திருவள்ளூா் மாவட்டத்திற்கு முக்கிய திட்டங்களை முதல்வா் அறிவித்தாா். அந்த அறிவிப்பில் ஒன்றான கசவநல்லாத்தூா்-தண்டலம் இடையே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.20.37 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தாா்.
அதன் அடிப்படையில் மாநில ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநா் சுமதி, செயற்பொறியாளா் ராஜவேல் உள்ளிட்ட மேற்பாா்வை பொறியாளா்கள் கசவநல்லாத்தூா்-தண்டலம் கிராமத்திற்கு இடையே செல்லும் கூவம் ஆற்றின் பாலம் அமைப்பதற்கான பணிகளை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, இந்த மேம்பாலம் 206.6 மீட்டா் நீளமும், 18.6 மீட்டா் அகலத்திலும், 10 தூண்களுடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான முதல்கட்டப்பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
அப்போது, கடம்பத்தூா் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி(பொது), செல்வி(கி.ஊ), முன்னாள் ஊராட்சி தலைவா்கள் மணி(தண்டலம்), பிரபாகரன்(நுங்கம்பாக்கம்), உமாமணிகண்டன்(பிஞ்சிவாக்கம்), ராமச்சந்திரன், விக்கிரமாதித்தன் மற்றும் ஊராட்சி பொதுமக்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

