கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அணிந்து வந்த சட்டை சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவானது ஒவ்வொரு ஆண்டும் திரைக்கலைஞர்களின் திறமைகளை மட்டுமின்றி, சர்வதேச சமூக மற்றும் அரசியல் சூழல்களின் மீதான அவர்களது எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் புதுமையான முறைகளில் வெளிகாட்டும் முக்கிய தளமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸின் கேன்ஸ் நகரில் கடந்த மே 13 ஆம் தேதியன்று துவங்கியுள்ளது.
தொடர்ந்து 11 நாள்கள் நடைபெற்று மே 24 ஆம் தேதியன்று நிறைவடையவுள்ள இந்த விழாவில் பல முன்னணி கலைஞர்கள் காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு புதுமையான வழிகளில் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
அவர்களின் வரிசையில் விக்கிலீக்ஸ் எனும் பிரபல ஊடக நிறுவனத்தின் நிறுவனரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாங்கேவும் இணைந்துள்ளார்.
திரைப்பட விழாவில் இடம்பெற்றுள்ள அவரது ‘தி ஸிக்ஸ் பில்லியன் டாலர் மேன்’ எனும் ஆவணப் படத்துக்கு பிரதிநிதியாக கலந்துக்கொண்ட அவர், இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 5 வயதுக்குட்பட்ட 4,986 பாலஸ்தீன குழந்தைகளின் பெயர்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து காட்சியளித்துள்ளார்.

மேலும், அவர் அணிந்திருந்த சட்டையின் முதுகுப் பகுதியில் ‘ஸ்டாப் இஸ்ரேல்’ (இஸ்ரேலை நிறுத்துங்கள்) என அச்சிடப்பட்டுள்ளது. இவ்வாறாக, காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு ஜூலியன் அசாங்கே தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலியனின் இந்தச் செயல் சர்வதேச அளவில் பலரும் அவருக்குத் தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வரும் அதே வேளையில் சிலரது எதிர்ப்புகளையும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கேன்ஸ் திரைப்பட விழாவில் பல்வேறு முன்னணி பிரபலங்கள் காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அந்த விருதைப் பெற்றுக்கொண்ட அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!