கேரளத்துக்கு சிவப்பு எச்சரிக்கை: சுற்றுலா தலங்கள் மூடல்!
திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக திருவனந்தபுரத்தில் 12 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. அருவிக்காரா அணையின் மூன்று மதகுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சனிக்கிழமையும் கேரள மாநிலம் காசர்கோடு, கன்னூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இன்னும் ஓரிரு நாள்களில் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
அடுத்து வரும் நாள்களிலும் கேரளத்தில் பரவலாக மழை பெய்யும் என்பதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இடுக்கி அணையில் படகுச் சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.
மே 24ஆம் தேதி, கேரளத்தின் கன்னூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிசூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.