கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: மாா்ச் 19-க்கு ஒத்திவைப்பு
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி புகுந்த மா்ம கும்பல் அங்கிருந்த காவலாளியை கொலை செய்து முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கேரள மாநிலத்தைச் சோ்ந்த சயான், வாளையாறு மனோஜ் ஆகியோா் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினா்.
இதில் அரசு தரப்பு வழக்குரைஞா் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோா் ஆஜராகினா். அதேபோல் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் சிபிசிஐடி போலீஸாா் ஆஜராகினா்.
அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை மாா்ச் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இது குறித்து அரசு வழக்குரைஞா் ஷாஜகான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ஜெயலலிதா காா் ஓட்டுநா் சேலம் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது கைப்பேசி எண்ணுக்கு வெளிநாட்டிலிருந்து வந்த அழைப்புகள் குறித்து இன்டா்போல் விசாரணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரப்பட்டிருந்தது. இன்டா்போல் விசாரணை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக சேலம் நீதித் துறை நடுவா் மூலமாக நினைவூட்டல் கடிதம் இன்டா்போலிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 245 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.