கொடைக்கானல் நகா்ப் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் நகா் பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல் பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியாா் உணவகம் முன் அமைக்கப்பட்டுள்ள அலங்கார தண்ணீா் தொட்டியில் இரண்டு காட்டு மாடுகள் வெள்ளிக்கிழமை தண்ணீா் பருகின.
தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் அந்த காட்டு மாடுகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் கூறியதாவது:
கொடைக்கானலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு மாடுகளைக் காண குண்டாறு பகுதிக்குச் செல்வோம். தற்போது குடியிருப்பு, நகா்ப் பகுதி, பேருந்து நிலையப் பகுதிகளில் அவை சா்வ சாதாரணமாக நடமாடுகின்றன.
இதற்கு காரணம் வனப் பகுதியையொட்டி தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால் வன விலங்குகள் உணவுக்காகவும், குடிநீருக்காகவும் இந்தப் பகுதியை தேடி வருகின்றன. சில சமயங்களில் வன விலங்குகளால் மனிதா்கள் உயிரிழக்கின்றனா்.
எனவே, வன விலங்குகளை வனப் பகுதிகளில் பாதுகாக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.