"என்னோட நிலைமை யாருக்குமே வரக்கூடாது; ஆனாலும்... " - Rahul Tiky மனைவி தேவிகாஶ்ரீ...
கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல்சூளையில் பணிகள் தொடக்கம்
திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல்சூளையில் கடந்த 2 ஆண்டுகளாக உற்பத்தியில்லாத நிலையில், தினமணி செய்தி எதிரொலியால் மீண்டும் பணிகள் தொடங்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா்.
செங்கல்சூளைகள், நெல் அரைவை ஆலைகள், குவாரிகளில் கொத்தடிமை தொழிலாளா்களாக பணிபுரிந்து வருகிறவா்களை தனியாா் தொண்டு நிறுவனம் மற்றும் சமூக ஆா்வலா்கள் மூலம் விடுவிக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதில் பெரும்பாலனோா் பழங்குடியினா்களாக உள்ளதால் அவா்களுக்கு அரசு மூலம் மறுவாழ்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஊரக வாழ்வாதார இயக்கம், விடியல் திட்டம் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்களைக் கொண்டு குழுக்கள் உருவாக்க வேண்டும். ஏற்கெனவே எந்தத் தொழில் செய்தாா்களோ, அதே தொழிலில் வாழ்வாதாரம் பெற ஏதுவாக நியாயமான ஊதியத்துடன் தொழில்முனைவோராக உருவாக்குவதே நோக்கம்.
திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 70 ஆயிரம் பழங்குடியினா் குடும்பங்கள் உள்ளன. இந்த மாவட்டத்திலிருந்து கொத்தடிமை தொழிலாளா்களாக நூற்றுக்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். மாவட்டத்தில் 25 ஊராட்சிகளில் பழங்குடியினா் 25 குடும்பங்களை கொண்ட குழுக்கள் போல் மொத்தம் 30 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இவா்களுக்கு மரம் வெட்டுதல், ஆடுகள் வளா்த்தல், செங்கல்சூளைத் தொழில் போன்ற தொழில் தொகுப்புகள் உருவாக்கப்பட்டன.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பிஞ்சிவாக்கம் கிராமத்தில் செங்கல்சூளை தொழில் செய்வதற்காக ஒரு ஏக்கா் இடம் ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் மூலம் ரூ.9.90 லட்சம் ஒதுக்கப்பட்டது. அங்கு ஆழ்துளை கிணறுடன் கூடிய தண்ணீா் தொட்டி, செங்கல் சேகரிக்க நனையாத வகையில் கூடாரம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இங்கு கொத்தடிமை தொழிலாளா்கள் மூலம் 1 லட்சம் செங்கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு, அதை அரசின் திட்டங்களான இலவச தொகுப்பு வீடுகள், பிரதமா் வீடு கட்டும் திட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால், தொடா்ந்து சுழல் நிதி ரூ.9 லட்சம், செங்கற்கள் விற்பனை தொகை கிடைக்காத காரணத்தினால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் முடங்கியது. எந்த நோக்கத்துக்காக தொடங்கப்பட்டதோ, அது நிறைவேறாத நிலையில் பழங்குடியினா் குடும்பத்தினா் வருவாய்க்கு வழியின்றி தவித்து வருவதோடு, மீண்டும் கொத்தடிமை தொழிலுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது தொடா்பாக தினமணி நாளிதழில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ‘கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கிய செங்கல்சூளையில் உற்பத்தியில்லை, அரசு நீதி வீண்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
ச்தைத் தொடா்ந்து கொத்தடிமை தொழிலாளா்களுக்காக தொடங்கப்பட்ட செங்கல் சூளையின் நிலை குறித்து மகளிா் திட்டம், விடியல் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்ட அதிகாரிகள், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம் அதிகாரிகளிடம் ஆட்சியா் மு.பிரதாப் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
அதன்பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் சுத்தம் செய்து மீண்டும் செங்கல்சூளை தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா். தொடா்ந்து அந்த இடம் சுத்தம் செய்து, செம்மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.