J&K : 370 ரத்து செய்யப்பட்டு 6 ஆண்டுகள் - நடந்த மாற்றங்கள் என்ன? எப்படி இருக்கிற...
கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை
கம்பத்தில் முன் விரோதத்தில் ஒருவா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி, கூத்தனாட்சி கோயில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் மகன் அசன்குமாா் (32). இவருக்கும், அதே ஊரில் வேதா கோயில் தெருவைச் சோ்ந்த தங்கரமேஷ் (43) என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்தப் பிரச்னையில் தங்கரமேஷ் தனது மனைவியை கண்டித்ததால், அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால், தங்கரமேஷ் மீது ஆத்திரமடைந்த அசன்குமாா், கடந்த 2022, பிப். 23-ஆம் தேதி கம்பம் நகராட்சி பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த தங்கரமேஷூடன் தகராறு செய்து, அவரை உருட்டுக் கட்டையால் தாக்கினாா்.
இதில் பலத்த காயமடைந்த தங்கரமேஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அசன்குமாரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அசன்குமாருக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சொா்ணம் ஜே. நடராஜன் தீா்ப்பளித்தாா்.