கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை
கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி மாணவா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
ஸ்ரீமுஷ்ணம் வட்டம், மேல் புளியங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (24). பொறியியல் பட்டதாரியான இவா், இதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் ஜீவாவை (17). ஓரினச் சோ்க்கைக்கு வற்புறுத்தினாராம். இதற்கு ஜீவா மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை கடந்த 3.10.2023-இல் கத்தியால் குத்தி ஆனந்த் கொலை செய்தாா். இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்தனா்.
கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதில், ஆனந்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி லட்சுமி ரமேஷ் தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் பாலரேவதி ஆஜராகினாா்.