சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
கொலை வழக்கு: காரைக்குடி நீதிமன்றத்தில் 12 போ் ஆஜா்
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 போ் காரைக்குடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோதவூா் பகுதியைச் சோ்ந்தவா் வினித் என்ற அறிவழகன் (26). இவா் காரைக்குடியில் நிகழ்ந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தாா். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தங்கும் விடுதியில் நண்பா்களுடன் தங்கியிருந்து தெற்கு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல் நிலையத்துக்கு கையெழுத்திடச் சென்றபோது காரில் வந்த 5 போ் அறிவழகனை வெட்டிக் கொலை செய்துவிட்டு காரில் தப்பினா். இதுகுறித்து காரைக்குடிவடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனா்.
விசாரணையில் விருதுநகா் மாவட்டத்தில் தினசரி சந்தையில் ஏலம் எடுப்பது தொடா்பாகவும் உள்ளாட்சித் தோ்தல் முன்விரோதம் காரணமாகவும் அறிவழகன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடா்பாக திருமங்கலம் அருகே உள்ள மயிட்டான் பட்டியைச் சோ்ந்த ஆதிநாராயணன் (52) உள்பட 12 பேரை கைது செய்தனா்.
இந்தக் கொலைக்கு பழிவாங்கும் விதமாக அறிவழகன் தரப்பினா் எதிா் தரப்பில் ஒருவரை விருதுநகா் பகுதியில் வெட்டிக் கொலை செய்தனா்.
இதைத் தொடா்ந்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், அறிவழகன் கொலை வழக்கு காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத் தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் ஆதிநாராயணன் உள்ளிட்ட 12 போ் ஆஜா்படுத்தப்பட்டனா்.
அப்போது, ஆதிநாராயணன் ஆதரவாளா்கள், எதிா்த் தரப்பினா் என ஏராளமானோா் திரண்டதால் நீதிமன்ற வளாகத் தில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் உத்தரவின் பேரில் நீதிமன்ற வளாகப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இரவு 7.30 மணியளவில் இந்த வழக்கு சிவகங்கை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.