கோடை விடுமுறை கோரி அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
பள்ளிகளைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் அங்கன்வாடி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக தொடங்கியுள்ள போராட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். விஜயலெட்சுமி தலைமை வகித்தாா்.
பள்ளிகளுக்கு வழங்குவதைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாதம் கோடைக்கால விடுமுறை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும்.
வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விளக்கி மாநிலப் பொருளாளா் எஸ். தேவமணி, மாவட்டச் செயலா் ஏசி. செல்வி, பொருளாளா் எஸ். சவரியம்மாள், மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.எம். ரேவதி உள்ளிட்டோரும் பேசினா்.
கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கலந்து கொண்டு கோரிக்கைகளை ஆதரித்துப் பேசினாா். சிஐடியு மாநிலச் செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.