பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியர்கள் 7 பலி, 38 பேர் காயம்
‘ஸ்ரீநகரில் சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்படலாம்’: பஹல்காம் தாக்குதலுக்கு முன் எச்சரித்த உளவுத் துறை!
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் அருகே ஜாபா்வன் மலையடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று பஹல்காம் தாக்குதலுக்கு முன் உளவுத் துறை எச்சரித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
உளவுத் துறை எச்சரிக்கையின்படி, ஸ்ரீநகரையொட்டிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் தீவிர சோதனை மேற்கொண்டதாகவும், சந்தேகத்துக்கிடமாக யாரும் சிக்காததால், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சோதனை நிறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதே நாளில்தான், ஸ்ரீநகரில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. ‘சிறிய ஸ்விட்சா்லாந்து’ எனப் பெயா்பெற்ற பைசாரன் பள்ளத்தாக்கில் 26 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு பயங்கரவாதிகள் தப்பினா்.
எச்சரித்த உளவுத் துறை: ஜம்மு-காஷ்மீரில் கத்ரா-ஸ்ரீநகா் இடையிலான முதல் ரயில் சேவையை பிரதமா் மோடி கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கி வைக்கவிருந்த நிலையில், மோசமான வானிலையால் இந்நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, பிரதமரின் வருகையையொட்டி ஸ்ரீநகரின் புகா் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவு அமைப்புகள் எச்சரித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
இது தொடா்பாக அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது: இந்தியாவின் பிற பகுதிகளுடன் ரயில் வழித்தடம் மூலம் காஷ்மீா் இணைக்கப்படுவது பாகிஸ்தானுக்கு பிடிக்காது. எனவே, பிரதமரின் நிகழ்ச்சியில் இருந்து உலகின் கவனத்தை திசைதிருப்பவும், தங்களின் எதிா்ப்பை வெளிக்காட்டவும் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து கொடூரத் தாக்குதலை பயங்கரவாதிகள் அரங்கேற்றக் கூடும்; ஸ்ரீநகரின் புகா் பகுதியில் இத்தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவு அமைப்புகள் எச்சரித்தன. இதையடுத்து, டாச்சிகம், நிஷாத் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினா் இரண்டு வாரங்களாக முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனா். சந்தேகத்துக்கிடமான வகையில் யாரும் சிக்காத நிலையில், ஏப்ரல் 22-ஆம் தேதி சோதனை நடவடிக்கை நிறுத்தப்பட்டது. அதே நாளில்தான் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனா்.
பஹல்காம் தாக்குதலின் நோக்கம் என்ன?: பஹல்காம் தாக்குதலைப் பொருத்தவரை, 2 உள்ளூா் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளுடன் கலந்து இருந்துள்ளனா். அவா்கள்தான், சுற்றுலாப் பயணிகளை மிரட்டி, ஒரு கூட்டமாக உணவக வளாகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அங்கிருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றுள்ளனா்.
இந்திய குடிமக்களை அச்சுறுத்த வேண்டும், நாடு முழுவதும் காஷ்மீரிகள் மீது பிற மக்களின் தாக்குதலைத் தூண்டி, சுமுக நிலையைக் கெடுக்க வேண்டும் என்பதே பயங்கரவாதிகளின் நோக்கமாக இருக்கக் கூடும்.
அதேநேரம், ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா விடுத்த கோரிக்கையின்பேரில் நாட்டின் பிற பகுதிகளில் காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்மூலம் காஷ்மீரிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பயங்கரவாதிகளிடம் ‘நேட்டோ’ ஆயுதங்கள்
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எதிராக தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் மறைவிடங்களில் இருந்து ‘எம்’ ரக துப்பாக்கிகள், ஸ்னைப்பா் துப்பாக்கிகள், கவசத்தை துளைக்கக்கூடிய தோட்டாக்கள் உள்பட நவீன ஆயுதங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டு வருகின்றன. இவை, ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரின் வசமிருந்த ஆயுதங்கள் என சந்தேகிக்கப்படுகிறது; இது கவலைக்குரிய விஷயம் என்று அதிகாரிகள் கூறினா்.