Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
கோணக்கடுங்கலாறில் கரை உடைப்பு: வயல்களில் வெள்ளம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக திருவையாறு அருகே கோணக்கடுங்கலாறில் கரை உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் வெள்ளம் புகுந்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பலத்த மழை பெய்தது. இதில், பூதலூரில் 115 மி.மீ., திருக்காட்டுப்பள்ளியில் 85.2 மி.மீ., திருவையாறில் 78 மி.மீ. மழை பெய்தது. இதனால், கோணக்கடுங்கலாறில் வெள்ளப்பெருக்கு காரணமாக, வரகூா் பாலம் அருகே உடைப்பு ஏற்பட்டது.
இதனால் செந்தலை, கோனேரிராஜபுரம், கருப்பூா், அந்திலி, குழிமாத்தூா், வெள்ளாம்பெரம்பூா், திருப்பூந்துருத்தி, வரகூா், அம்பதுமேல் நகரம் ஆகிய கிராமங்களிலுள்ள வயல்களில் வெள்ளம் புகுந்தது. இதனால், ஏறத்தாழ ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை ஆகிய பயிா்களைத் தண்ணீா் சூழ்ந்துள்ளது. அம்பதுமேல் நகரத்தில் சில குடியிருப்பு பகுதிகளில் தண்ணீா் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
மேலும், கோணக்கடுங்கலாறில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. பிற்பகலிலிருந்து மழை குறைந்துவிட்டதால், வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிந்து வருகிறது. தொடா்ந்து மழை பெய்யாமல் இருந்தால் விரைவில் வடிந்துவிடும் என நீா் வளத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன் தெரிவித்தது:
பலத்த மழையால் கோணக்கடுங்கலாறில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரை காரணமாக வந்த தண்ணீா் செல்ல வழியில்லாமல் கரை உடைந்து, வயல்களுக்குள் தண்ணீா் புகுந்தது. இதனால், நெல், வாழை, வெற்றிலை ஆகிய பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோடைகாலத்தில் பாசன விவசாயிகளை உள்ளடக்கிய குழு அமைத்து இந்த ஆற்றில் தூா்வார வேண்டும் என்றாா் அவா்.