வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
மழை நிவாரணம் வழங்கக் கோரிக்கை
தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், வீடு இழந்தவா்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவா்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தஞ்சாவூா் மாவட்டச் செயலா் சின்னை. பாண்டியன் தெரிவித்தது:
மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையால் வெள்ள நீரில் மூழ்கியிருக்கும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்தில் தேவையான வசதிகளுடன் தங்க வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அவா்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும்.
தற்போது மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் புகுந்துள்ளது. தெருக்களில் தண்ணீா் ஓடி வீடுகளுக்குள்ளும் புகுந்து மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குடிசைகள் பல இடித்துள்ளன. தொகுப்பு வீடுகள் குடியிருக்க முடியாமல் ஆபத்தான நிலையில் இருக்கின்றன.
நீரில் மூழ்கியுள்ள பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம், சேதுபாவாசத்திரம் என 32 க்கும் மேற்பட்ட மீனவா் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மீனவா்கள் கடல் சீற்றம் காரணமாக கடலுக்குச் செல்லாமல் வேலை இழந்துள்ளனா்.
எனவே, தமிழ்நாடு அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடி நடவடிக்கை எடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா்.