ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாஜக எம்பி
கோயில்களுக்குள் சட்டையின்றி நுழையும் நடைமுறை எதிர்ப்புக்கு கேரள முதல்வர் ஆதரவு?
கேரளத்தில் கோயில்களுக்குள் சட்டையின்றி செல்லும் நடைமுறையை ஒழிப்பதற்கு முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
சிவகிரி மடத்தின் யாத்திரை மாநாட்டில் பேசிய மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா, ``கேரளத்தில் கோயில்களுக்குள் சட்டையின்றி நுழையும் நடைமுறையை ஒழிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த நடவடிக்கைக்கு முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது ``தேவஸ்வம் வாரியத்தின் பிரதிநிதி ஒருவர் என்னைச் சந்தித்தார். அவர்கள் இந்த முடிவை எடுக்கப் போவதாகக் கூறினர். இது நல்ல யோசனை என்றுதான் சொன்னேன்’’ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் ஆதரவு கூறியதற்கு இந்து அமைப்புகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, நாயர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாரன் நாயர், ``கோயில்களில் உள்ள பழக்கவழக்கங்கள், நடைமுறைகளில் அரசாங்கம் தலையிடக்கூடாது. கிறிஸ்துவர், முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களை விமர்சிக்கும் தைரியம் முதல்வருக்கோ சிவகிரி மடத்திற்கோ இருக்கிறதா? இதற்கு முதல்வர் ஆதரவு அளித்திருக்கக் கூடாது. ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் சொந்த சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்கள் உள்ளன. அவை அதற்கேற்ப மதிக்கப்பட்டு பின்பற்றப்பட வேண்டும்’’ என்று கூறினார்.
கேரளத்தில் 5 முக்கிய தேவஸ்தானங்கள் உள்ளன. குருவாயூர், திருவிதாங்கூர், மலபார், கொச்சின், கூடல்மாணிக்கம் ஐந்தும் சேர்ந்து கிட்டத்தட்ட 3,000 கோயில்களை நிர்வகிக்கின்றன.