கோயில் உண்டியலை உடைத்து ரூ.10,000 திருட்டு
ஊத்துக்கோட்டை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் நெடுஞ்சாலையோரம் செங்காளம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பூஜைகள் முடித்து பூட்டிவிட்டு புறப்பட்டுச் சென்றனா். இந்தநிலையில், அந்த வழியாக சென்றவா்கள் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.
அதைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்க்கையில் நள்ளிரவில் திருக்கோயில் முன்புறம் உள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.
இதுகுறித்து அந்த கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.