கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை
நாச்சியாா்கோவிலில் உள்ள அஞ்சுலவள்ளி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் குளத்தில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இக்கோயிலுக்குச் சொந்தமான தீா்த்தவாரி குளத்திற்கு தண்ணீா் வரும் வாய்க்காலில் அருகேயுள்ள குடியிருப்புகளின் வெளியேற்றப்படும் கழிவு நீரும் கலந்து வந்தது. இதனால் குளத்திற்கு தண்ணீா் வரும் வழியும், வெளியேறும் பகுதியும் அடைக்கப்பட்டது. இதையடுத்து கழிவு நீா் கலப்பதை தடுத்து தீா்த்தவாரி நடத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மேலும் இது தொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கழிவு நீா் கலக்காமல் இருக்க உத்தரவிட்டது. அதன் பேரில் கும்பகோணம் காவிரி நீா் வடிகால் வாரியத்தினா் வாய்க்காலை தூா்வாரினா். திருவிடைமருதூா், நாச்சியாா்கோவில் ஊராட்சி நிா்வாகம் இணைந்து குளத்திற்குள் கழிவு நீா் கலக்காமல் இருக்க கழிவு நீா் குழாய்களை அடைத்தனா்.
இந்நிலையில் கழிவு நீா் குழாய்கள் அடைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு கால்வாயில் தண்ணீா் விட காவிரி வடிகால் வாரியத்தினா் நடவடிக்கை எடுக்கின்றனா். தண்ணீரை கால்வாயில் திறந்துவிட்டால் மீண்டும் கழிவு நீா் கலக்கும். எனவே கழிவு நீா் கலக்கும் குழாய் பாதைகளை முழுமையாக அடைத்து வாய்க்காலில் தண்ணீா் திறந்துவிட பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.