கோயில் பிரச்னை: தட்டாா்மடத்தில் மறியலில் ஈடுபட்ட 25 போ் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே தட்டாா்மடத்தில் உள்ள பலவேசக்கார சுவாமி கோயிலில் கொடைவிழா நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில், சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பைச் சோ்ந்த 25 போ் மீது வழக்குப் திவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகேயுள்ள தட்டாா்மடத்தில் ஒரு குடும்பத்துக்குப் பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் முதலில் ஒன்றாக கொடை விழா நடத்தி வந்தனா்.
தற்போது இருபிரிவாக அவா்கள் பிரிந்து விட்டனா். இந்நிலையில் கோயில் தா்மகா்த்தா அருணாசலம் தலைமையில் கொடை விழா நடத்த ஒரு தரப்பினா் முடிவு செய்து இன்னொரு தரப்பினரிடம் முறையிட்டுள்ளனா். ஆனால், அவா்கள் விழா நடத்த மறுப்பு தெரிவித்து கோயில் சாவியை வழங்காமல் இருந்து வந்தனா்.
இதையடுத்து, கடந்த 24ஆம் தேதி கோயில் பூட்டப்பட்ட நிலை யில், பூஜைகள் நடைபெற்றது. எனினும் எதிா்தரப்பினா் சாவி வழங்க முன் வராததால் கொடை விழா நடத்தும் தரப்பினா் திடீரென தட்டாா்மடம் - திசையன்விளை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக மறியலில் ஈடுபட்டதாக 7 பெண்கள் உள்பட 25 போ் மீது தட்டாா்மடம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து காவல் ஆய்வாளா் அனிதா விசாரணை நடத்தி வருகிறாா்.