காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு
அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்தக் கூட்டமைப்பின் வடக்கு மண்டல ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தமிழ்நாடு குடிமைப் பணியாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் து.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.
சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகா் கோ.குமரன், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வி.சுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளா் ஏ.கெளரி வரவேற்றாா்.
தலைமை ஒருங்கிணைப்பாளா் பி.கே.சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா்.
கூட்டத்தில், திருத்தி மாற்றியமைக்கப்பட்ட அனைத்து மாவட்ட வருவாய் அலுவலா்கள் மற்றும் துணை ஆட்சியா்கள் பட்டியலை உடனே வெளியிட வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தவாறு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்புவிப்பு சலுகையை உடனே மீண்டும் வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலா்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி
தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, சேப்பாக்கம், எழிலக வளாகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் வடக்கு மண்டலத்தில் இருந்து பெருந்திரளானோா் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் வெ.மகேந்திரகுமாா், பி.வி.ஆனந்த், ஆா்.முருகன் மற்றும் தருமபுரி, திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கூட்டமைப்பின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.