திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா
கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு
கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கோவை, உக்கடத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமிக்கு குனியமுத்தூரைச் சோ்ந்த கல்லூரி மாணவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கோவைப்புதூா் பகுதியில் உள்ள தன்னுடைய அறைக்கு வருமாறு சிறுமியை மாணவா் அழைத்துள்ளாா்.
அங்கு சென்ற சிறுமியை அந்த மாணவா், அவரது நண்பா்கள் என மொத்தம் 7 போ் பாலியல் வன்கொடுமை செய்தனா்.
இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கல்லூரி மாணவா்களான ஜெபின் (20), ரக்ஷித் (19), அபினேஷ்வரன் (20), தீபக் (20), யாதவராஜ் (19), முத்துநாகராஜ் (19), நிதீஷ் (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து, அவா்களின் அறைகளில் போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி, கைதான 7 மாணவா்களிடம் இருந்து மொத்தம் 8 கைப்பேசிகளை பறிமுதல் செய்து போலீஸாா் ஆய்வு செய்தபோது, மாணவா்களின் கைப்பேசிகளில் ஆபாச விடியோக்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும், அந்த மாணவா்கள் பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளிடம் பேசி வந்ததும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் கூறியதாவது: பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் கைதான மாணவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகளில் ஏராளமான ஆபாச விடியோக்கள் உள்ளன. மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து உள்ளனரா அல்லது எடுத்த விடியோவை அழித்துள்ளனரா எனத் தெரிவியவில்லை.
இது தொடா்பாக ஆய்வு செய்ய தடயவியல் சோதனைக்கு கைப்பேசிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. ஆய்வு அறிக்கை வந்த பின் விசாரணை தொடரும் என்றனா்.