கோவை: திருமணம் கடந்த உறவு - மனைவியின் காதலனை கொன்ற கணவன்
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் முருகவேல் (56). இவர் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சமையல்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வசித்து வந்தார்.
அங்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி (39) என்பவர் பழக்கமாகியுள்ளார். முனியாண்டி ஆக்டிங் டிரைவராக பணியாற்றி வந்தார்.
இதனிடையே முருகவேல் மனைவிக்கும், முனியாண்டிக்கும் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த முருகவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதையடுத்து முருகவேல் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள வடுகன் காளிபாளையத்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.
இருப்பினும் அவர்களின் திருமணம் கடந்த உறவு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முருகவேல் பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது முருகவேல் மனைவி வீட்டில் இல்லை. உடனடியாக அவர் முனியாண்டியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த முருகவேல் ஆத்திரமடைந்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், முருகவேல் முனியாண்டியின் நெஞ்சு பகுதியில் கத்தியால் சரமாரியாக குத்தினார். முருகவேல் மனைவி உடனடியாக முருகவேலை வீட்டில் தள்ளி கதவை அடைத்துவிட்டு, முனியாண்டியை காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிந்து முருகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.