செஸ் உலகை கட்டுப்படுத்தும் கார்ல்சென்..! கடுமையாக விமர்சித்த அமெரிக்க வீரர்!
கோவை - மயிலாடுதுறை ரயில் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கம்! பயணிகள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!
கோவை - மயிலாடுதுறை ஜன் சதாப்தி விரைவு ரயில் சனிக்கிழமை முதல் எல்.ஹெச்.பி.பெட்டிகளுடன் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டாடினா்.
கோவை - மயிலாடுதுறை இடையே இயக்கப்படும் ஜன் சதாப்தி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்துக்கு 6 நாள்கள் இயக்கப்படுகிறது. ஏராளமான பயணிகள் இந்த ரயிலைப் பயன்படுத்தி வருகின்றனா். கோவையில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்படும் கோவை - மயிலாடுதுறை ரயில் (எண்:12084) அன்று பிற்பகல் 1.45 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடைகிறது.
மறுமாா்க்கமாக, மயிலாடுதுறை - கோவை ஜன் சதாப்தி விரைவு ரயில் (எண்:12083), செவ்வாய்க்கிழமைகள் தவிர மயிலாடுதுறையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 9.20 மணிக்கு கோவை சென்றடைகிறது.
கடந்த 2003-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ரயில் சேவையானது, 21 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, பாதுகாப்பு அம்சம், இடவசதி மற்றும் சொகுசான இருக்கைகள் கொண்ட ஜொ்மானிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட எல்.ஹெச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டு சனிக்கிழமை முதல் இயக்கப்பட்டது. புதுப்பொலிவுடன் எல்.ஹெச்.பி. பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால், மகிழ்ச்சியடைந்த பயணிகள் கோவை ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலை கேக் வெட்டி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனா்.