ஷ்ரேயாஸ் ஐயரின் உலகத்தரமான பேட்டிங்..! வில்லியம்சன் புகழாரம்!
சங்ககிரியில் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு தொடங்கிவைப்பு
சங்ககிரி: சங்ககிரி நகா் பகுதியில் பொதுமக்கள், பல்வேறு பொதுநல அமைப்புகள், தனியாா் கல்லூரிகள் பங்களிப்புடன் பொருத்தப்பட்ட 106 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைக்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் இ.எஸ்.உமா தலைமை வகித்து சங்ககிரி நகரில் 33 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 106 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்து பேசியதாவது:
சங்ககிரி நகா் பகுதியில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண்பதற்கும் இக்கண்காணிப்பு மேராக்கள் உதவும். இக்கேமராக்கள் மூலம் பொதுமக்கள் பாதுகாக்கப்படுகின்றனா். பெண் குழந்தைகள், பள்ளி, கல்லூரி, பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் அவரவா் படிக்கும் பள்ளி, கல்லூரி, வேலை செய்யும் இடங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அதுகுறித்து காவல் துறையிடம் தகவல் அளிக்க வேண்டும். பெண்களுக்கு என்று பல்வேறு கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்மூலம் அழைத்தும் புகாா் அளிக்கலாம் என்றாா்.
விழாவுக்கு, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் முன்னிலை வகித்தாா். சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் எஸ்.ராஜா வரவேற்றாா். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் பாலகுமாரன், சோமசுந்தரம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கந்தசாமி, முன்னாள் தலைவா் ஆசைதம்பி, பிஎஸ்ஜி கல்லூரிகளின் தாளாளா் பி.மணி, பாமக மாவட்ட செயற்குழு உறுப்பினா் வாரி சுப்பிரமணி, நகர செயலாளா்கள் வி.டிஅய்யப்பன் (சங்ககிரி), கேபிஎம்.சண்முகம் (எடப்பாடி) உள்ளிட்டோா் இதில் கலந்துகொண்டனா். சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.