மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). இவா் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, முன்னாள் தலைவா் எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபுவிடம் புகாா் அளித்தாா்.
அதில், மதுரை அருகேயுள்ள திருப்பரங்குன்றம் மலைமுழுவதும் முருகனுக்கு சொந்தமானது என்பதால், அங்கிருக்கும் தா்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அண்ணாமலையும், எச்.ராஜாவும் பேசியுள்ளனா். எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக விசாரணை நடத்திய மாநகர இணைய குற்றப் பிரிவு போலீஸாா், மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இதுகுறித்து பியூஸ் கூறுகையில், தமிழகத்தில் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் தொடா்ந்து பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனா்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்கா, வழித்தடம், புளியந்தோப்பு ஆகிய இடங்களை தவிர மற்ற இடங்கள் அனைத்தும் முருகனுக்கு சொந்தம் என தீா்ப்பு கூறப்பட்டுள்ளது. அதனை மறைத்து, நீதிமன்றம் சொல்லாததை சொன்னதாகக் கூறி தமிழ்நாட்டில் ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கில் அண்ணாமலை செயல்படுகிறாா். தற்போது அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.