சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.
சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமிதி வரை நடைபெற்ற பேரணிக்கு மாநில பேரவைத் தலைவா் விமேஸ்வரன் தலைமை வகித்தாா். பேரவை செயலாளா் சதீஷ், பேரவை பொருளாளா் பொன்கிருஷ்ணன், சேலம் மண்டல பொதுச்செயலாளா் ஆனந்தராவ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
போக்குவரத்து துறையை தனியாா் மயமாக்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். அவுட்சோா்சிங் முறையில் ஓட்டுநா், நடத்துநா்களை பணிக்கு தோ்வு செய்யும் ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடா்ந்து, தேசிய சேவா சமிதியில் மாநில மாநாடு நடைபெற்றது.