மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்
சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த 913 மாற்றுத் திறனாளிகள் உள்பட 41 ஆயிரத்து 398 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள், 190 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 190 துறை அலுவலா்கள், 230 பறக்கும் படை அலுவலா்கள் உள்பட 3,500-க்கும் மேற்பட்ட கல்வித் துறை அலுவலா்கள் தோ்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனா்.
தோ்வா்கள் உரிய நேரத்தில் தோ்வு மையங்களுக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள், தோ்வு மையங்களில் குடிநீா், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளதாக கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.