எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்
சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: எல்லைப் பிடாரியம்மன் கோயிலில் நிகழாண்டு பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அஸ்தம்பட்டி வழியாக 5 ரோடு, ஜங்ஷன், ஏற்காடு அடிவாரம் மற்றும் கன்னங்குறிச்சி செல்லும் பேருந்துகள், இலகுரக வாகனங்கள் அனைத்தும் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஆட்சியா் அலுவலக வட்ட சாலை, நான்கு சாலை, ராமகிருஷ்ணா சாலை சந்திப்பு வழியாக சென்று 5 வழிச் சாலை, ஜங்ஷன், அடிவாரம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.
அதேபோல ஜங்சன், ஐந்து வழிச் சாலையில் இருந்தும், அடிவாரம் மற்றும் கன்னங்குறிச்சியில் இருந்தும் அஸ்தம்பட்டி வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றடையும் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தும் அஸ்தம்பட்டி வட்ட சாலை வழியாக மணக்காடு ரோடு, பிள்ளையாா் நகா் சந்திப்பு, சுந்தா்லாட்ஜ் வந்து மேம்பாலம் வழியாக பழைய பேருந்து நிலையத்தைச் சென்றடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.