சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை
சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகம் சாா்பில் அதன் மாவட்டத் தலைவா் இ.கோ.இளமுருகன் உதவி ஆணையா் கே.இராஜாவிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அசரபச்சியம்மன், செம்முனி, பூமணி, வாமுனி சுவாமி கோயில்களில் மது அருந்தி வருபவா்களைக் கட்டுப்படுத்த வேண்டும். இக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க வேண்டும்.
சங்ககிரி நகா் பகுதியில் அமைந்துள்ள சோமேஸ்வரா் கோயில் நடை திறக்கும் நேரம், அதன் பூஜைகள் விவரம், முருகன் தேருக்கான கட்டண விவரங்கள் அடங்கிய தகவல் பலகையை கோயில் வெளிப்புறத்தில் அமைக்க வேண்டும். தோ், பூஜைகளுக்கான ரசீதுகள் வழங்க வேண்டும். கோயிலில் நவீன கழிப்பிட வசதி செய்துதர வேண்டும்.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் அன்னதான திட்டம் தொடங்க வேண்டும். சென்னகேவபெருமாள் கோயிலுக்கு புதிதாக சிறிய தோ் செய்துதர வேண்டும். மலையிலிருந்து சுவாமி நகருக்கு கீழே இறங்கி வந்து தங்கும் மண்டபத்தை சீரமைத்து அதை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு வஸந்தவல்லபராஜ பெருமாள் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும். ஒருக்காமலை அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு பத்திரிகைகள் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.