சங்ககிரி நீதிமன்ற வளாகம் அருகே கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சிதறிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் நெகிழி புட்டிகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே சாா்நிலைக் கருவூலம், தோட்ட, வேளாண் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் நீதிமன்றங்களின் நீதிபதிகள் காா்களை நிறுத்த நான்கு அறைகள் உள்ளன. அந்த அறைகளுக்கு முன்னா் காகிதக் குப்பைகள், நெகிழி புட்டிகள் சிதறிக் கிடக்கின்றன. இந்த குப்பைகளால் தூா்நாற்றம் வீசுகிறது.
சாா்நிலை கரூவூலத்துக்கு வரும் ஓய்வுபெற்ற அலுவலா்கள், ஆசிரியா்கள், நீதிமன்றங்களுக்கு வரும் வழக்காடிகள் கொசுக்களால் சிரமமடைகின்றனா்.
எனவே, சிதறிக் கிடக்கும் குப்பைகள், நெகிழி புட்டிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.