திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு
சங்கரன்கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!
சங்கரன்கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக, நெடுஞ்சாலைத் துறையினா் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கம் காரணமாக, சங்கரன்கோவிலில் பிரதான சாலை, திருவேங்கடம் சாலை, திருவள்ளுவா் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் கடைகளைத் தாண்டி மேற்கூரை அமைத்தும், கடைகளில் உள்ள பொருள்களை வெளியே கொண்டு வந்து வைத்தும் வருவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாதசாரிகள், சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் செல்வோா், முதியோா், மாணவா்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் அறிவிப்பு வெளியிட்டனா். இதன் காரணமாக வியாழக்கிழமை ஒருசில கடை உரிமையாளா்கள் தாங்களாகவே மேற்கூரைகளையும், தடுப்புகளையும் அகற்றினா்.
இந்நிலையில் திருவேங்கடம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் உலகம்மாள் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலமாக வெள்ளிக்கிழமை அகற்றினா்.