முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
சங்கரன்கோவில் அருகே இளைஞா் உடல் உறுப்புகள் தானம்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பருவக்குடியைச் சோ்ந்த இளைஞரின் உடல் உறுப்புகள் திருநெல்வேலியில் புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
பருவக்குடியைச் சோ்ந்த பெரியமாடசாமி-பெரியமாரியம்மாள் தம்பதியின் மகன் ராஜா (31). இவா், தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 14 ஆம் தேதி ராஜபாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜா, மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அவரது மூளையில் ரத்தக்கசிவு அதிகமாக இருப்பதும், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதும் மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது.
மேலும், மறுநாள்( ஏப். 15) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது மூளை செயலற்றிருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவரது உறவினா்களிடம் மருத்துவா்கள் எடுத்துக்கூறியதைத் தொடா்ந்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினா் முன்வந்தனா்.
அதன்பேரில், அவரது கல்லீரல், இருசிறுநீரகங்கள் ஆகியவை புதன்கிழமை தானமாக வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதிபாலன் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.