சங்கரன்கோவில் அருகே விபத்தில் பாதயாத்திரை பக்தா் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காா் மோதியதில் பாதயாத்திரை பக்தா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் சொக்கநாதன்புத்தூரை சோ்ந்த மாரிமுத்து மகன் மாரிச்செல்வம் (40). ஓட்டுநா். இவா் அப்பகுதியைச் சோ்ந்த பாதயாத்திரை குழுவுடன் திருச்செந்தூா் கோயிலுக்கு சங்கரன்கோவிலை அடுத்த சண்முகநல்லூா் வழியாக வெள்ளிக்கிழமை பாதயாத்திரை சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மாரிச்செல்வம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவலறிந்த சின்ன கோவிலாங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா். மாரிச்செல்வத்துக்கு மனைவி வள்ளி, இரண்டு குழந்தைகள் உள்ளனா்.