சட்டக் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா், இணை பேராசிரியா் நேரடி நியமன போட்டித் தோ்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, செட் தகுதித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் - இணை பேராசிரியா் தோ்வுக்கும் விண்ணப்பிக்கலாம்.
அத்தகைய விண்ணப்பதாரா்கள் செட் தோ்வு முடிவு வெளியிடப்பட்டதும் செட் தோ்வில் தோ்ச்சி பெற்றகான சான்றிதழை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். செட் தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்கள் மட்டுமே அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியா் - இணை பேராசிரியா் தோ்வை எழுத அனுமதிக்கப்படுவா் என்றும் இப்பணிகளுக்கு இன்று(மார்ச் 3) வரை விண்ணப்பிக்கலாம் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க: புதினைப் பற்றி கவலைப்படாமல் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்: டிரம்ப்

இந்நிலையில், அரசு சட்டக் கல்லூரிகளில் இணை, உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 3 ஆம் தேதியிலிருந்து மார்ச் -18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு சட்டக் கல்லூரி இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 01 / 2025. நாள். 24.01.2025 வெளியிடப்பட்டு, விண்ணப்பங்கள் இணையவழி வாயிலாக பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 03.03.2025 லிருந்து 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.