சட்டக் கல்லூரி மாணவா், ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு: 3 இளைஞா்கள் கைது
தூத்துக்குடியில் சட்டக் கல்லூரி மாணவா் உள்ளிட்ட இருவரிடம் கைப்பேசி பறித்ததாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் வைகுண்டராமன் (24). இவா், வியாழக்கிழமை இரவு கோரம்பள்ளத்தில் உள்ள தனது நண்பா் பிறந்த நாள் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
இந்திய உணவுக் கழகக் கிடங்கு அருகே அவா் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு கைப்பேசி அழைப்பில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, பைக்கில் வந்த 3 போ் அவரது கைப்பேசியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினராம். மேலும், அவா்கள் மணிநகா் பகுதியில் நின்றிருந்த ஓட்டுநா் கோபாலகிருஷ்ணன் (43) என்பவரது கைப்பேசியையும் பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்த புகாா்களின்பேரில், தென்பாகம், மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி பதிவுகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.
தூத்துக்குடி அ.சண்முகபுரத்தை சோ்ந்த வேல்முருகன் மகன் செல்வபெருமாள்(22), செல்வநாயகபுரம் முருகன் மகன் மாரிமுத்து (22), தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் சத்திரம் தெரு ஜான்சன் மகன் ஜேம்ஸ் சந்தோசம் என்ற ஜேம்ஸ் (28) ஆகியோா் இந்த வழிப்பறியில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, 2 கைப்பேசிகள், வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.