மணிப்பூரின் கடின காலத்துக்கு விரைவில் முடிவு: உச்சநீதிமன்ற நீதிபதி நம்பிக்கை
சட்டவிரோத குடியேறிகளுக்கு விலங்கிட்ட விவகாரம்: அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களின் கை- கால்களில் விலங்கிட்டு வெளியேற்றியதை கண்டித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதும், சட்டவிரோத குடியேறிகளை அவரவா் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
அதன்படி, கடந்த ஜனவரி முதல் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 388 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா்.
அவா்களில் பிப்ரவரி 5, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக 333 போ்அமெரிக்க ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனா். அதேபோல் 55 போ் அமெரிக்காவில் இருந்து பனாமா நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டனா்.
இந்நிலையில், இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட அனைவரின் கை-கால்களில் விலங்கிடப்பட்டு, அழைத்து வரப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதா? என வெளியுறவு அமைச்சகத்திடம் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘ அமெரிக்காவில் இருந்து மூன்று கட்டங்களாக நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத இந்திய குடியேறிகளிடம் அவா்களது மதம் சாா்ந்த தலைப் பாகைகளை அகற்றுமாறு அமெரிக்கா கோரவில்லை. அதேபோல் விமான பயணத்தின்போது சைவ உணவைத் தவிர மதரீதியாக வேறு எந்தவொரு கோரிக்கையையும் சட்டவிரோத குடியேறிகள் முன்வைக்கவில்லை.
கடும் கண்டனம்: அவா்களின் மத உணா்வுக்கு மதிப்பளித்து அதற்கேற்ற உணவுகளை வழங்கியிருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு அமெரிக்காவிடம் கண்டனத்தை பதிவுசெய்தோம்.
கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல்கட்டமாக அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட 104 சட்டவிரோத இந்திய குடியேறிகளில் பெண்கள் உள்ளிட்டோரின் கை-கால்களில் விலங்கிடப்பட்டு நாடு கடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தோம்.
சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் நடைமுறையை கடந்த 2012, நவம்பா் முதல் அமெரிக்கா பின்பற்றி வருகிறது.
பொதுவாக சட்டவிரோதமாக குடியேறிய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விமான பயணத்தின்போது விலங்கிடப்படுவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விமான அதிகாரியின் முடிவே இறுதியானது.
அந்த வகையில் கடந்த பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத இந்திய குடியேறிகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை என அமெரிக்கா உறுதிப்படுத்தியது.
இந்தியா வந்திறங்கிய குடியேறிகளிடம் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது அவா்களும் இதை உறுதிப்படுத்தினா்.
இருதரப்பு உறவு: கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
அப்போது இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தகத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ. 43.31 லட்சம் கோடி (500 பில்லியன் டாலா்) அளவுக்கு இரட்டிப்பாக்க முடிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.